வழிபாடு

முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்: குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்....

Published On 2023-02-05 03:11 GMT   |   Update On 2023-02-05 04:45 GMT
  • கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம்.
  • இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது.

கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அந்த வகையில் இன்று தைப்பூசமாகும். அதனுடன் இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது. தைப்பூசத்தையொட்டி இந்து மதக்கடவுள் முருகன் வழிபாட்டு தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்பட முருகக்கடவுள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தியும், காவடி எடுத்தும், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

பழனியில் இன்று அதிகாலை 3 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் தற்போது வரை 1.10 லட்சம் பக்தர்கள் முருகனை தரிசித்துள்ளனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவியத்தொடங்கினர். பக்தர்கள் கடலில் நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே உள்ளது.

அதேபோல் வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவித்த வண்ணம் உள்ளனர். அதிகாலையில் முருகப்பெருமானும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்து வருகிறது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து இருந்து தைப்பூச திருவிழா இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் படைசூழ கோலாகலமாக நடந்து வருகிறது. முருகன் கோவில்களில் எங்கு திருப்பினாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுகிறது.

Tags:    

Similar News