வழிபாடு

மழை காரணமாக சபரிமலையில் கூட்டம் இல்லை

Published On 2024-11-28 10:56 IST   |   Update On 2024-11-28 10:56:00 IST
  • பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
  • மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.

இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.

தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News