பழனி முருகன் கோவிலின் இடும்பன், கடம்பன் உபசன்னதிகளில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
- பழனி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது.
- இன்று 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்து வருகிறது.
கடந்த 23-ந்தேதி மலைக்கோவிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் பாதவிநாயகர் கோவில் முதல் படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், குராவடிவேலர் உள்ளிட்ட உபசன்னதிகளில் தெய்வங்களின் திருக்கலசம் அலங்கரிக்கப்பட்டு அருட்சக்தி கொணர்தல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தெய்வ சக்தி கலசங்களும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, நெய்வேத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து உபசன்னதிகளில் யாகம் நிறைவு பெறுகிறது.
பின்னர் உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு திரு உலா நடக்கிறது. பின்னர் கிரிவீதிகளில் உள்ள 5 மயில் சிலை, பாதவிநாயகர், சேத்ரபாலர், படிப்பாதை விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் கந்தபுராணம், திருப்புகழ், திருமுறை பாடி சிறப்பு வழிபாடு நடக்கிறது.