வழிபாடு

திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-03-28 03:50 GMT
  • பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' என விண்ணதிர பக்தி கோஷம் முழங்கினர்.
  • பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் மீனவ கிராமத்தில் பழமையான படவேட்டம்மன் கோவில் உள்ளது. சிறியதாக இருந்த கோவிலை விரிவாக்கம் செய்து புனரமைக்க வேண்டியிருந்தது. இதற்காக கோவில் தர்மகர்த்தா கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக வழங்கினர். இதையடுத்து கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி 19-ந்தேதி பந்தக்கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதல் கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு படவேட்டம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதே நேரத்தில் ராஜகோபுர வாயில் பஞ்ச கலசங்களில் புனிநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' என விண்ணதிர பக்தி கோஷம் முழங்கினர். பின்னர் மூலவர் படவேட்டம்மன் மற்றும் நந்தி, பாலமுருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

கோவிலுக்கு பல ஊர் நிர்வாகம் சார்பில் சீர்வரிசைகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படவேட்டம்மன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

விழாவில் கிராம தலைவரும், கோவில் தர்மகர்த்தாவுமான கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., தொழிலதிபர் பரசு பிரபாகரன், கிராம ஆலோசகர்கள் அஞ் சப்பன், ஆறுமுகம், கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் கிராம நிர்வாகிகள், கே.வி.கே. குப்பம் பொதுமக்கள், பல்வேறு மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News