வழிபாடு

முப்பெரும் தேவியர்

Update: 2022-09-29 09:05 GMT
  • லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்.
  • சரஸ்வதி கல்வியின் தெய்வம்.

துர்க்கை

துர்க்கை நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள். வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். இவளைக் கொற்றவை என்றும், 'காளி' என்றும் குறிப்பிடுவார்கள். வீரர்கள் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபவார்கள்.

மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே 'நவராத்திரி' எனப்படுகின்றன. அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி. மகிஷனை வதைத்தவள் 'மகிஷா சுரமர்த்தினி'.

மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்பவடிவத்தில் இருக்கிறது.

நவ துர்க்கை

1.வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :

1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.

லட்சுமி

லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள்.

இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.

அஷ்ட லட்சுமிகள்

1.ஆதிலட்சுமி, 2.மகாலட்சுமி, 3.தனலட்சுமி, 4. தானிய லட்சுமி, 5. சந்தானலட்சுமி, 6.வீரலட்சுமி, 7. விஜயலட்சுமி, 8.கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.

இடை மூன்று நாள் நிவேதன வினியோகம்.

4. கதம்ப அன்னம், 5. தயிர் சாதம், 6. தேங்காய் சாதம்.

சரஸ்வதி

சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவளுக்குத் தனிக் கோயில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.

விஜயசதமி

ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.

பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.

இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம். நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.

அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8-ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

அஷ்ட சரஸ்வதிகள்

1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.

கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்: 7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.

Tags:    

Similar News