வழிபாடு

உயிர் பெற்று எழுந்த நந்தி, கோபம் தணிந்த பரமகல்யாணி அம்பாள்

Published On 2023-12-03 05:12 GMT   |   Update On 2023-12-03 05:12 GMT
  • இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான்.
  • நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

எல்லா சிவன் கோவில்களிலும் கர்ப்பகிரகத்துக்கு எதிரே இறைவனை நோக்கியபடி நந்திகேசுவரர் (நந்தி) எழுந்தருளியிருப்பதை காணலாம். அதேபோல் இந்த கோவிலிலும் கர்ப்பகிரகத்தின் எதிரே கொடிமரத்துக்கு முன் பெரிய நந்தி சிலை உள்ளது. இங்கு எழுந்தருளிய நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான். இதனால் சாபவிமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி தவம் இருக்கிறான். அவனது தவ வலிமையை கண்டு மனம் இறங்கிய இறைவன், திரிகூடபர்வத கடம்ப வனப்பகுதியில் சுயம்புவாக தான் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் ஆலயத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை முழங்கிடச் செய்யும் வகையில் ஒரு நந்தியை (நந்திகேசுவர்) நிறுவுமாறும், அப்படி செய்தால் சாபம் தீரும் என்றும் கூறுகிறார்.

அதன்படி தேவேந்திரன், பிரம்மதேவனின் மகனும், சிற்பக்கலையின் தலைவனுமான மயனை அழைத்து, கடம்ப வனத்தில் உள்ள சுயம்புலிங்கத்தின் முன் ஒரு நந்திகேசுவரரை நிறுவுமாறு பணித்தான். இதைத்தொடர்ந்து மயன் கடம்ப வனம் வந்து கடினமாக பணி செய்து சிற்ப சாஸ்திரங்களின்படி முழுமை பெற்ற ஒரு நந்தியை வடிவமைத்தான்.

சாஸ்திரங்களின் அடிப்படை விதி எதுவும் மாறாமல் வடிவமைக்கப்பட்டதால், கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி, திடீரென உயிர்பெற்று எழுகிறது. உடனே மயன் தனது தந்தையை மனதில் நினைத்து வேண்டியபடி, கையில் இருந்த சிறிய உளியினால் நந்தியின் பின் முதுகில் அழுத்தி அமரச் செய்து விடுகிறான். இதனால் இங்குள்ள நந்திகேசுவரர் முதுகில் சிற்றுளியால் ஏற்பட்ட சிறிய கீறலுடன் காட்சி தருகிறார்.

நந்திகேசுவரருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை `நந்திக்களபம்' என்ற விசேஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த நந்திகேசுவரரிடம் மனதார வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த நந்தியை `பிரார்த்தனை நந்தி' என்று அழைக்கிறார்கள். நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

முனிவருக்கு சாபம்

கணங்களின் தலைவனான பிருங்கிரிடி முனிவர் ஒருமுறை சிவசைலநாதரை மட்டும் தரிசித்துவிட்டு, அம்பாளை பிரதட்சணம் செய்யாமல் சென்று விடுகிறார். இதனால் கோபமுற்ற அம்பாள், பிருங்கிரிடியின் சக்திகள் அனைத்தையும் அபகரித்துவிடுகிறார்.

அத்துடன் பிருங்கிரிடிக்கு சாபமிடுமாறு ஈசனிடம் முறையிடுகிறார். ஆனால் சிவசைலநாதரோ, அம்பாள் சொல்வதை காதில் வாங்காமால் பாராமுகமாய் இருந்து விடுகிறார்.

இதனால் கோபம் கொண்ட அம்பாள், அங்கிருந்து மேற்கு நோக்கி பயணித்து திரிகூடபர்வதத்தில் உள்ள அத்ரி மகரிஷியின் குடில் அருகே அமர்ந்து கடுந்தவம் செய்யத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து சிவசைலநாதர், ``தேவி நீ கோபம் கொள்ள வேண்டாம். எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நீ கட்டாயம் நமது இருப்பிடம் வரவேண்டும்'' என்று கூறி அம்பாளை சமாதானம் செய்தார்.

ஈசனின் வேண்டுகோளை ஏற்று அம்பாள் கோபம் தணிந்து மீண்டும் சிவசைலம் எழுந்தருளினார். அன்று முதல் அம்பாள் `பரமகல்யாணி' என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Tags:    

Similar News