வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை கேடிக வாகனங்களில் வீதிஉலா

Published On 2023-02-24 04:49 GMT   |   Update On 2023-02-24 04:49 GMT
  • திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர்.
  • அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஆதி தம்பதியர்களுக்கு நடந்த சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து ஜல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வசந்த உற்சவத்தை நடத்தினர்.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள திருமஞ்சன கோபுரம் அருகில் சூரிய புஷ்கரணியில் இருந்து புனித நீரை எடுத்து திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவிலின் பிரதான அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்மாசனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News