null
புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-1)
- ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
- சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.
நோன்பின் மாண்பு ரமலான் மாதம் அரபி மாதங்களில் ஒன்பதாவது வரிசையில் இடம்பெற்ற ஓர் ஒப்பற்ற மாதமாகும். ரமலான் என்பதன் பொருள் 'கரித்தல்' என்பதாகும். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஸ்லிம்கள் மீது ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. "எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற் கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பு இருக்கிறாரோ, அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
"இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பரிசுத்த மானவர்களாக ஆகக்கூடும்". (திருக்குர்ஆன் 2:183)
நோன்பு யாருக்கு கடமை?
1) முஸ்லிமாக இருக்க வேண்டும்
2) பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்
3) புத்தி சுவாதீனமுள்ளவராக இருக்க வேண்டும்
4) சுகமுள்ளவராக இருக்க வேண்டும்.
5) ஊரில் தங்கி இருக்க வேண்டும்
இந்த ஐந்து அடிப்படைகளின் மீது இருப்பவர்கள், புனித ரமலானில் கண்டிப்பாக நோன்பிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த ஐந்து அடிப்படைகளில் ஒன்றை இழந்திருந்தாலும் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகாது. நோன்பு இரு வகைப்படும். அவை: கடமையான நோன்பு, உபரியான நோன்பு.
கடமையான நோன்புகள் மூன்று பிரிவுகளாகப் பிரிகிறது. ரமலான் மாத நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, நேர்ச்சை நோன்பு, இம்மூன்று நோன்புகளையும் நோற்பது கடமையாகும்.
உபரியான நபி வழி நோன்புகள் எட்டு வகைகளாக பிரிகிறது. அவை: வாரத்தில் திங்கள், மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, மாதத்தில் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களின் நோன்பு, முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்களின் நோன்பு, ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பு, துல்ஹஜ் மாதத்தின் 1 முதல் 9 நாட்களின் வரையுள்ள நோன்பு, ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோற்கப்படும் நோன்பு, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான மாதங்களில் வைக்கப்படும் நோன்பு, ஒருநாள் நோன்பு மறுநாள் ஓய்வு ஆகிய எட்டு வகையான நோன்புகள் உபரியான நபிவழி நோன்புகளாகும்.
கடமையான ரமலான் மாத நோன்புகளை நோற்பதற்கு, மேற்கூறப்பட்ட எட்டு வகையான நோன்புகளும் பயிற்சிக்களமாக அமைகிறது. இதனால் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க உடல் வலிமையையும், மன வலிமையையும் முஸ்லிம்கள் பெற்று சர்வ சாதாரணமாக நோன்பிருக்கிறார்கள்.
`இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலில் இருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்" (திருக்குர் ஆன் 2:187)
இஸ்லாம் மனித உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதை குர்ஆனும், ஹதீஸூம் உணர்த்துகின்றன. நோன்பு வைத்திருக்கும் பகல் வேளையில் மட்டுமே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் கூடாதே தவிர இரவு நேரங்களில் அல்ல. பகல் இறைவனுக்கு, இரவு நமக்கே. இறைவனுக்காக இருக்கும் உண்ணாவிரதம், மனித உணர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை. சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடிப்போம், நன்மைகள் பெறுவோம்.