வழிபாடு

சிறுவாபுரி முருகன் கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

Update: 2022-08-18 07:29 GMT
  • இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
  • கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்குன்றம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கிடையே ரூ.1 கோடி மதிப்பில் கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், பூர்ணா ஹூதி, தீப ஆராதனை மற்றும் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை சாந்தி ஹோமம், யாகசாலை நிர்மாணம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கும்பஅலங்காரம், முதல்கால ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.

நாளை(19-ந்தேதி) காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமம் நடக்கிறது. 20-ந்தேதி 4,5-ம் கால யாக பூஜை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி காலை 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தரிசனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News