இந்தியா

மைசூரு குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சி

Published On 2023-10-16 05:29 GMT   |   Update On 2023-10-16 05:38 GMT
  • காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனை

மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 15-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 விநாயகர் சிலை

துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா மற்றும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசு பஸ் ஜீப், அரசியலமைப்பு சாசன புத்தகம் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண மலர்களால் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் மாற்றப்படுகிறது. மழை பெய்தால் மாற்ற வேண்டிய தேவை இல்லை. வெயில் அடித்தால் மட்டுமே மாற்ற 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்களை மாற்ற வேண்டும். தசரா மலர் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 மல்யுத்த போட்டி

இதேபோல், தசரா கண்காட்சி அருகே உள்ள மைதானத்தில் நேற்று மல்யுத்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்கவுட் அண்ட் கைட் மைதானத்தில் உணவு மேளா தொடங்கியது. இதனை மந்திரி கே.எச்.முனியப்பா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

புத்தக கண்காட்சி

மைசூரு பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரு தசரா கண்காட்சியை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 90 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

தசரா மின்விளக்கு அலங்காரம், ஜம்பு சவாரி ஊர்வலம் செல்லும் ராஜபாதை சயாஜி ராவ்ரோடு பச்சை (கிரீன்) மண்டபத்தில் மந்திரி கே.ஜே. ஜார்ஜ் தொடங்கி வைத்தார். மின்விளக்கு அலங்காரத்ைத பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

 மின்விளக்கு அலங்காரம்

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனைக்கு மத்தியில் தசரா கலாசார நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அவர் சிறந்த சங்கீத வித்வான்களுக்கு கர்நாடக அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கி பாராட்டினார். பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News