வழிபாடு

பனை ஓலைப்பெட்டிகள், கூடைகளை ஏ.வி.தர்மாரெட்டி அறிமுகப்படுத்தியபோது எடுத்தபடம்.

திருப்பதி கோவிலில் ஓலைப்பெட்டியில் லட்டு பிரசாதம் வினியோகம்

Published On 2023-02-27 02:27 GMT   |   Update On 2023-02-27 02:27 GMT
  • திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
  • சணல் பை பயன்படுத்தப்பட்டது.

திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தை பெற்றுச்ெசல்ல கவுண்ட்டர்களுக்கு வரும் பக்தர்கள் முதலில் பாலித்தீன் கவர்களை விலை கொடுத்து வாங்கி, அதில் லட்டு பிரசாதங்களை வாங்கி எடுத்துச்சென்றனர்.

பாலித்தீன் கவர்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை தற்போது வரை அமலில் உள்ளது. இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது.

ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின்னர் காகித அட்டைப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முயற்சியாக லட்டு பிரசாதத்துக்காக பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார்.

இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News