வழிபாடு

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-01-06 05:00 GMT   |   Update On 2023-01-06 05:00 GMT
  • இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
  • மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.

அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News