வழிபாடு
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-05-27 03:25 GMT   |   Update On 2022-05-27 03:25 GMT
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சூலக்கல் மாரியம்மனை தரிசித்து கோவிலில் உள்ள தீர்த்தத்தை கண்களில் இட்டுக் கொண்டால் கண் நோய் குணமாகும் என்ற ஐதீகம். ஆண்டுதோறும் இந்த கோவிலில் தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை , மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

26-ந் தேதி காலை 10.30 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், விநாயகர், சூலக்கல் மாரியம்மன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மாலை திருத்தேரில் எழுந்தருளிய சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் குங்குமம் நிற பட்டுடுத்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4.56 மணிக்கு விநாயகர் தேர்முன்னால் செல்ல, 36 அடி உயரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த சூலக்க மாரியம்மன் தேர் மாலை 5 மணி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தார் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார் மற்றும் பக்தர்கள் கரகோஷத்துடன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் மீது வாழைபழங்களை வீசினார்கள். தேர் திருவிழாவை விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு தேர் மதுரைவீரன் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. 2-ம் நாள் தேர்த்திருவிழா 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
Tags:    

Similar News