ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

இன்று நடை திறப்பு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதி

Published On 2021-10-16 05:05 GMT   |   Update On 2021-10-16 06:22 GMT
சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.
திருவனந்தபுரம் :

மலையாள காலண்டரின் படி துலா மாத பிறப்பை முன்னிட்டு துலா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது ஆகம விதிகளின்படி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி விளக்கு ஏற்றி சடங்குகளை செய்ய உள்ளார்.

நாளை(17-ந்தேதி) முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதனால் நாளை அதிகாலை 5 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் நடை வருகிற 21-ந்தேதி வரை திறந்திருக்கும். அன்றைய தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள், ஆர்.டி.பி. சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.

துலா மாத பூஜைகள் முடிந்தபிறகு வருகிற 21-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நவம்பர் 2-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படுகிறது.

Tags:    

Similar News