search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட சேவை
    X
    கருட சேவை

    திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை

    கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
    நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும் அனந்தன் எனப்படும் ஸ்ரீஆதிசேஷன், பெரிய திருவடி எனப்படும் ஸ்ரீகருடன், சேனாமுதல்வன் எனப்படும் ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இவர்களில் ஆதிசேஷன் பெருமாளுக்கு குடையாகவும், சிம்மாசனமாகவும், படுக்கையாகவும் இருக்கிறார். விஸ்வக் சேனர் மகா விஷ்ணுவின் படைகளின் சேனாதிபதியாக விளங்குகிறார்.

    ஆனால் ஸ்ரீகருடனோ பெருமாளுக்கு தோழன், தாசன், ஆசனம், வாகனம், கொடி, மேல்சுட்டு, விசிறி என 7 விதமான தொண்டுகளை செய்பவராக உள்ளார். இத னால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார். இந்த சிறப்பு காரணமாக கரு டனை வைணவர்கள் ‘கருடாழ்வார்’ என்று போற்றி புகழ்கின்றனர்.

    கருடனை பெரிய திருவடி, கொற்றப்புள், தெய்வப் புள், வேதஸ் வரூபன், காய்சினப்புள், பட்சிராஜன், புள்ளரையன் வைநதேயன், ஓடும் புள், சுபர்ணன், விஜயன், உவணன், வினைதச் சிறுவன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள். கருடன் இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்து தன் தாய் வினதையின் அடிமைத் தனத்தை நீக்கினார். அந்த தாயின் அருளால் தான் பெருமாளின் வாகனமாக கருடன் திகழ்கிறார். இவ ருக்கென்றே ‘கருட பஞ்சமி’ என்ற பண்டிகையும் உள்ளது. சகோதரர்களின் நலனுக்காக பெண்களால் இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

    கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீஆண்டாள். பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார் பெருமாள் அருகிலேயே இருக்கிறார் என்பார்கள்.

    இதனால் தான் வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் (நாளை சுவாதி நட்சத்திர நாள்) கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இ¢ல்லை. மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.

    மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். கருடனின் பார்வைக்கு, ‘சூட்சும திருஷ்டி’ என்று பெயர். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது. எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.

    திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

    புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.

    வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும். எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.

    இப்படி பல்வேறு சிறப்பு களை கொண்டுள்ள கருடன், பெருமாளுக்கு செய்யும் கருட சேவையால் மேலும் சிறப்பு பெறுகிறார். வைணவத் தலங்களில் விழா நாட்களிலும், பிரம் மோற்சவத்தின் போதும் திருமால் எத்தனையோ விதமான வாகனங்களில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் வரும் போது, பக்தர்களால் அதிகம் ஆரா தனை செய்யப்படுகிறார். திருமாலின் வாகனமாக கருடன் மாறியதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. கருடன் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து மகாவிஷ்ணுவை சுமந்து செல்லும் வாகனமாக மாறியதாக ஒரு கதை உண்டு.

    இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் கருடன், இந்திரனுடன் போரிட்டார். அப்போது திருமால் உபேந்திரனாக அவதாரம் எடுத்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். அந்த போரில் கருடனின் ஆணவம் நீங்கும் வகையில் அவரை வீழ்த்தி அடக்கினார். தன் நிலை உணர்ந்த கருடன் திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் மாறியதாக சொல்வார்கள்.

    கருடன் மகாபலம் பொருந்தியவர். அழகான முகம், குவிந்த இறகுகள், உறுதியான நகங்கள், கூர்மையான கண் பார்வை, பருத்த கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தலை என பல சிறப்பம்சங்களைக் கொண்டவர். எல்லா திசைகளிலும் மிக வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட கருடன், தன் சக்தி மூலம் திருமாலுக்கு உதவினார். முதலையிடம் சிக்கிய கஜேந்திரயானையைக் காப்பாற்ற திருமால் கருடன் வாகனத்தில் பறந்து வந்தார் என்ற ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதும்.

    திருமால் நினைக்கும் முன்பே அந்த செயலுக்கு கருடன் தயாராகி விடுவார் என்பார்கள். எனவே தான் பக்தர்களை காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் எழுந்தருள்வதை சிறப்பாக சொல்கிறார்கள். இதையே ‘கருட சேவை’ என்கிறோம். சிலருக்கு பெருமாளை தினமும் வழிபட, வழிபட ஒருவித அகங்காரம் வந்து விடக்கூடும்.

    அப்படி இல்லாமல் பெருமாளுக்கு என்றென்றும் தாசனாக இருக்கும் ஸ்ரீகருடன் போல எப்போதும் திருமாலுக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்பதை கருட சேவை நமக்கு உணர்த்துகிறது. புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடைபெறும். அன்றைய தினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும். எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.
    Next Story
    ×