ஆன்மிகம்

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

Published On 2019-03-13 10:10 GMT   |   Update On 2019-03-13 10:10 GMT
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
நடராஜர்

அண்டம் முழுவதும் நடனத்துக்காக போற்றி புகழப்படுபவர் நடராஜர். சிவபெருமான் 64 வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவமாக இது போற்றப்படுகிறது. இந்த கோலத்தில் நடனமாடும் போது உலக உயிர்கள் அனைத்தும் அழிந்து அடுத்த புது உலகம் தோன்றும். அப்ஸமார புருஷா என்னும் குள்ளனை, காலில் விழச் செய்து, அவன் ஆணவத்தை அழிக்க, அவன் மீது நிற்பது போல் நடராஜர் தோற்றம் இருக்கும். நடராஜரின் தோற்றமான உலக உயிர்களின் உருவாக்கத்தை உணர்த்தும் விதத்தில் இருப்பதாக விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மந்திரா

பிரபஞ்சத்தின் தலைமை சிற்பியாக புராணங்கள் விஸ்வகர்மாவை சித்தரிக்கின்றன. இவருடைய மனைவிகளில் ஒருவர்தான் மந்திரா. இவர்களது மகன் நளன், ராமாயண காவியத்தின் போது, வானர வீரர்களில் ஒருவனாக இருந்து, ராமபிரானுக்கு உதவி செய்தவன். முனிவர் ஒருவரிடம் பெற்ற சாபத்தின் நளனுக்கு வரமாக அமைந்து விட்டது. அதாவது எதை நீரில் தூக்கிப் போட்டாலும், அது மூழ்காமல் தண்ணீருக்கு மேலே மிதக்கும் என்பது நளனுக்கு கிடைத்த சாபம். அதுதான் ராமாயண யுத்தத்திற்காக இலங்கைக்குச் செல்ல கற்களைக் கொண்டு பாலம் அமைக்க நளனுக்கு உதவிகரமாக இருந்தது. அந்த சிறப்பு மிக்க பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தான் மந்திரா.

பரீட்ஷித்

மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் ஐந்து பேரில் அர்ச்சுனனின் பேரன் தான் பரீட்ஷித். இவன் அபிமன்யுவின் மகன். மகாபாரதப் போரின் போது, பரீட்ஷித் தாயின் கருவில் வளர்ந்து வந்தான். அப்போது அஸ்வத்தாமன் ஆயுதத்தை ஏவி, தாயின் வயிற்றில் அடித்தான். இதனால் பரீட்ஷித் பிறக்கும் போதே இறந்து பிறந்தான். ஆனால் கிருஷ்ண பகவானின் அருளால், அவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவனே பின்னாளில் அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்தான்.

பரீட்ஷித், ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அங்கு ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரை பரீட்ஷித் பல முறை வணங்கியும், அவர் தியானத்தில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட பரீட்ஷித், முனிவரின் மீது பாம்பு ஒன்றை மாலை போல் போட்டு விட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கு வந்த முனிவரின் மகன், தன் தந்தையின் மீது பாம்பை போட்டவன், 7 நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் என்று சாபமிட்டார். அதன்படியே பரீட்ஷித் பாம்பு தீண்டி இறந்தான்.

கிருதயுகம்

உலகின் நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்களைக் கொண்டதாகும். கிருத யுகத்தை ‘சத்ய யுகம்’ என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இந்த யுகத்தில் வாழும் மக்கள் அனைவருமே நேர்மையானவர்களாகவும், தங்கள் கடமையில் இருந்து தவறாதவர்களாகவும் இருப்பார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பாசுபதம்

சிவபெருமானின் சக்தி மிகுந்த ஆயுதமாகும். எப் பொழுது தர்மம் அழிகின்றதோ அதை மீட்க இதை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து படைப்புகளையும் அழிக்கக் கூடியது. பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனது தவவலிமையால் சிவன் அவன் வேண்டும் வரத்தை கேட்குமாறு கூற, அவன் சிவனிடமிருந்து பாசுபதத்தை பெற்றுச் சென்றான்.
Tags:    

Similar News