ஆன்மிகம்

வித்தியாசமான விநாயகர் வடிவங்கள்

Published On 2019-01-16 09:02 GMT   |   Update On 2019-01-16 09:02 GMT
பல்வேறு ஊர்களில் ஆனைமுகன் வித்தியாசமான உருவில் காட்சி தருகிறார். எந்த ஊரில் எந்த வடிவில் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் இருக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை ‘நெற்குத்தி விநாயகர்’ என்றும் அழைப்பார்கள். பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் ‘பொய்யாமொழி விநாயகர்’ என்று பெயர் பெற்றார். இங்குள்ள லிங்கம் போன்ற பாணத்தில் கணபதியின் உருவம் கொண்டிருப்பது விசேஷமான அமைப்பாகும்.

திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில், தன் அன்னையாரான கங்காதேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோருடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானை தரிசிக்கலாம்.

கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ள விநாயகருக்கு ‘கணக்கு விநாயகர்’ என்று பெயர். இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றபோது, திருப்பணியை மேற்பார்வை செய்து வந்த கணக்குப் பிள்ளையிடம் மன்னன், சந்தேகத்தோடு கணக்கு கேட்டு கெடு விதித்தான். அதுவரையிலும் கணக்கு எழுதி வைக்காத கணக்கர், விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, துல்லியமான கணக்கை அவருக்கு அளித்தாராம் இந்த விநாயகர். இதனால் இந்த பெயர் வந்திருக்கிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நவக்கிரக சன்னிதியில் நெல்லிக்காய் பிள்ளையார் அருள்புரிகிறார். தன்னுடைய கழுத்தில் நெல்லிக்காய் மாலை அணிந்திருப்பதால் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு நெல்லிக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News