ஆன்மிகம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2018-12-18 08:40 IST   |   Update On 2018-12-18 08:40:00 IST
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான மண்டல மஹோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 9.15 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றினார்கள்.

பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாராயண பாராயணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பினு, ஆபரண பெட்டி வரவேற்புக் குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News