ஆன்மிகம்
நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தபோது எடுத்த படம்.

நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி

Published On 2018-10-12 10:41 IST   |   Update On 2018-10-12 10:41:00 IST
தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
Tags:    

Similar News