ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின

Published On 2018-08-12 03:19 GMT   |   Update On 2018-08-12 04:44 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்குரார்ப்பணத்துடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. அதையொட்டி விஸ்வசேனர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்திர முறைப்படி மகா கும்பாபிஷேக விழா 16-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. அதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

யாக சாலையில் வைதீக காரியகர்ம பூஜைகளை மேற்கொள்ள நேற்று வரை மொத்தம் 45 வேத விற்பன்னர்கள் திருமலைக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யாக சாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது. உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை, புதிதாக அமைக்கப்பட்ட யாக சாலையில் உள்ள ஹோம குண்டங்களில் அக்னி வளர்க்கப்பட்டு யாகம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து புண்ணியாவதனம், பஞ்சகாவ்யாராதனை, வாஸ்து ஹோமம், ரக்‌ஷாபந்தனம் ஆகியவை நடக்கின்றன. இரவு 9 மணியளவில் கோவிலில் உள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் சக்தியை 18 கும்பங்களில் ஆவாகனம் செய்யப்படுகிறது. அந்தக் கும்பங்களுக்கு தினமும் நித்யகைங்கர்யம் செய்யப்படுகிறது.

நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு நாட்களில் 8 ரகமான திரவியங்களால் அஷ்டபந்தனம் தயார் செய்து மூலவரின் பத்ம பீடத்தில் வைக்கப்படுகிறது. 15-ந்தேதி (புதன்கிழமை) காலை கைங்கர்யம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, மதியம் 1 மணியளவில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு 14 கலசங்களுடன் மகா சாந்தி, திருமஞ்சனம் செய்யப்படுகிறது. யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கலா வாகனம் என்ற பூஜை நடக்கிறது. மூலவர் வெங்கடாஜலபதிக்கும், தங்க விமான பிரகாரத்துக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆராதனை, நைவேத்தியம், பிரம்மஹோச பூஜைகள், அச்சதோரோபணம் ஆகியவை நடக்கின்றன.

அன்று இரவு 8 மணியளவில் பெரிய சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 17-ந்தேதி வழக்கம்போல் அனைத்துத் தரிசன முறைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
Tags:    

Similar News