ஆன்மிகம்

தம்பதியர் ஒற்றுமைக்கு திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில்

Published On 2018-11-10 04:40 GMT   |   Update On 2018-11-10 04:40 GMT
திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் வனத்தில் தவம் செய்த முனிவர்களுக்கு தொடர்ந்து தீங்கு செய்து வந்தனர். உடனே முனிவர்கள், நாராயணரை வேண்டினர். இதை ஏற்றுக்கொண்ட நாராயணர், அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அனுமாருக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட அனுமர், அரக்கர்களை கொன்று முனிவர்களின் தவவேள்வியை நிறைவு பெற செய்தார். இதனால் இந்த கோவிலில் அனுமார் சங்கு, சக்கரத்தோடு 4 கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.

மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News