கிரிக்கெட்

பெங்களூரு - ராஜஸ்தான் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு

Published On 2024-05-22 09:11 GMT   |   Update On 2024-05-22 09:11 GMT
  • பெங்களூரு அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது.
  • முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்தது ராஜஸ்தான் அணி.

அகமதாபாத்:

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

ஒருபக்கம் முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தையே பிடித்தது.

மறுபக்கம் இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.

பெங்களூரு அணியின் இந்த எழுச்சியை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

"இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பெங்களூரு அணி நம்பியதே அற்புதமான விஷயம். தொடர் தோல்வியினால் அணியின் வீரர்கள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் மற்ற அணி வீரர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர். அதுவும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், "தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் பெங்களூரு அணியை வெல்ல முடியும். இல்லையென்றால் குவாலிபையர் 1-ல் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி எளிதாக வென்றது போல ராஜஸ்தான் அணியை பெங்களூரு எளிதாக வென்று விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக சுனில் கவாஸ்கர் கிண்டலாக கமெண்ட் அடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News