கிரிக்கெட்

பவுமா          ரிஷப் பண்ட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே இன்று 2வது 20ஓவர் போட்டி: மழைக்கு வாய்ப்பு என தகவல்

Published On 2022-06-11 23:26 GMT   |   Update On 2022-06-12 00:38 GMT
  • இன்றைய போட்டியை காண வரும் ஒடிசா ரசிகர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிக்கெட்டுகளில் 'நோ மாஸ்க் நோ என்ட்ரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாக்:

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இதனிடையே, கட்டாக்கில் இன்று மழை பெய்யாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என மாநில வானிலை ஆய்வு மையத்தின் புவனேஸ்வர் பிரிவு இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இருப்பினும், போட்டியை பாதிக்கக்கூடிய கனமழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், மழை பெய்தாலும் நிலைமையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு ஒடிசாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், போட்டியைக் காண வரும் விளையாட்டு ரசிகர்கள் வெப்ப அலை போன்ற சூழ்நிலைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முககவசம் அணியாத யாரும் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கட்டாக காவல்துறை ஆணையர் எஸ் கே பிரியதர்ஷி தெரிவித்துள்ளார். போட்டிக்கான டிக்கெட்டுகளில் 'நோ மாஸ்க் நோ என்ட்ரி' என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் கத்திகள் உள்ளிட்ட பிற பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News