கிரிக்கெட்

மீண்டும் ஆர்சிபி-யின் கோப்பை கனவு தகர்ப்பு- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

Published On 2024-05-22 17:58 GMT   |   Update On 2024-05-22 17:58 GMT
  • அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார்.
  • ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படித்தார் 34 ரன்களும் மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோஹ்லர் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டினர். டாம் கோஹ்லர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய சாம்சன் சிக்சர் அடிக்க தேவையில்லாமல் இறங்கி வந்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜூரல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

இதனை தொடர்ந்து ரியான் பராக் - ஹெட்மெயர் ஜோடி அணியின் வெற்றிக்காக போராடினர். கடைசி கட்டத்தில் ரியான் பராக் 36 ரன்னிலும் ஹெட்மெயர் 26 ரன்னிலும் ஓரே ஓவரில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரம் கூட கொண்டாட முடியவில்லை. 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய பவல், கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Tags:    

Similar News