கிரிக்கெட்

சதமடித்த பாபர் அசாம்

பாபர் அசாம், குல்தில் ஷா அபாரம் - முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2022-06-08 20:10 GMT   |   Update On 2022-06-08 20:10 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் சதமடித்தார்.
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

முல்தான்:

வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஷமார் புருக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 70 ரன்னில் வெளியேறினார்.

பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். மொகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News