டோனியின் (7) ரன் அவுட்டுக்கு ரிவஞ்ச் கொடுத்த சமி (7 விக்கெட்)- கொண்டாடும் ரசிகர்கள்
- 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
- அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டுக்கு முகமது சமி பழி திர்த்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை ஏங்காத ரசிகர்கள் இல்லை.
அந்த நிலையில் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டோனியின் ஜெர்சி நம்பர் 7 என்றும் முகமது எடுத்த விக்கெட்டும் 7 என்றும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.