கிரிக்கெட்

டி20 தொடரை வெல்வது யார்? இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இன்று மோதல்

Published On 2024-01-09 05:12 GMT   |   Update On 2024-01-09 05:12 GMT
  • இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்கும்.

மும்பை:

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பார்முக்கு திரும்ப வேண்டியது அணிக்கு அவசியமாகும். மொத்தத்தில், ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்ற வரிந்து கட்டும்.

அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பனிப்பொழிவின் தாக்கத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருப்பதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News