கிரிக்கெட்

நாக்பூர் டெஸ்ட்: ஜடேஜா, அக்சர் பட்டேல் அரை சதம்... வலுவான நிலையில் இந்தியா

Published On 2023-02-10 11:40 GMT   |   Update On 2023-02-10 11:40 GMT
  • ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
  • ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

நாக்பூர்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் நாளிலேயே 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக அஸ்வின் 23 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News