உலகக் கோப்பையின் முக்கியமான அதிர்ச்சி தோல்விகள்
- சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அடக்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.
- இதற்கு முன்பு அந்த அணியுடன் மோதிய இரு ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் தோற்று இருந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, 2019-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்துக்கு 'ஆப்பு' வைத்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அடக்குவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு அந்த அணியுடன் மோதிய இரு ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் தோற்று இருந்தது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் ருசித்த 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டில் ஸ்காட்லாந்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றிருந்தது. அதாவது உலகக் கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
உலகக் கோப்பையில் அதிர்ச்சி தோல்வி என்பது புதிதல்ல. அவற்றில் சில முக்கியமான ஆட்டங்கள்:-
1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுக அணியாக நுழைந்த ஜிம்பாப்வே, தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது. இதே உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 43 ரன் வித்தியாசத்தில் அசுர பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசை நிலைகுலைய வைத்ததும் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்விகளில் ஒன்றான வர்ணிக்கப்பட்டது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் புது வரவான கென்யா, முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை 93 ரன்னில் சுருட்டி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கொடி நாட்டியது. உலகக் கோப்பையில் டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணியை வீழ்த்திய முதல் போட்டி இது தான்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அப்போது புதுமுக அணியான வங்காளதேசம் கடைசி லீக்கில் 62 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு 'வேட்டு' வைத்தது.
2007-ம் ஆண்டு தொடரில் வங்காளதேச அணி, இந்தியாவுக்கும், அயர்லாந்து பாகிஸ்தானுக்கும் 'செக்' வைத்து முதல் சுற்றோடு விரட்டியதை மறந்து விட முடியாது.
2011-ம் ஆண்டில் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 328 ரன் இலக்கை அயர்லாந்து 49.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசினார்.