கிரிக்கெட்

முதல் 20 ஓவர் போட்டி: இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்

Published On 2022-11-17 12:19 GMT   |   Update On 2022-11-17 12:19 GMT
  • பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.
  • இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

வெல்லிங்டன்:

இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் , ஒருநாள் ஆட்டத்துக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் தொடரில் ஆடவில்லை. ரிஷப் பண்ட் இரு தொடர்களிலும் துணை கேப்டனாக இருக்கிறார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் நாளை (18-ந்தேதி ) நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த மோசமான ஆட்டத்தால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இதனால் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பையில் சரியான முறையில் வாய்ப்பு வழங்கப்படாத யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார்கள்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான டிரெண்ட் போல்ட், அதிரடி பேட்ஸ்மேன் மார்டின் குப்தில் ஆகியோர் ஒயிட் பால் போட்டிகளில் (20 ஓவர், ஒரு நாள் ஆட்டம்) இடம் பெறவில்லை.

கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். அந்த அணியும் உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது. பிலிப்ஸ், கான்வே, பெர்குசன், ஜிம்மி நீசம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 21-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: வில்லி யம்சன் (கேப்டன்), பின் ஆலன், கான்வே, பிலிப்ஸ், பிரேஸ்வெல், ஜிம்மி நீசம், டாரல் மிச்சேல், சான்ட்னெர், சவுத்தி, ஆடம் மிலின், பிளையர் டிக்னெர், சோதி.

Tags:    

Similar News