கிரிக்கெட்

இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அன்டர்வுட் மரணம்

Published On 2024-04-16 02:05 GMT   |   Update On 2024-04-16 02:05 GMT
  • இடக்கை சுழற்பந்து வீச்சாளரான அன்டர்வுட் 1966 முதல் 1982-ம் ஆண்டு வரை 86 டெஸ்டில் விளையாடி 297 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.
  • கவாஸ்கரின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியவர்.

புதுடெல்லி:

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வர்ணிக்கப்பட்ட டேரக் அன்டர்வுட் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான அன்டர்வுட் 1966 முதல் 1982-ம் ஆண்டு வரை 86 டெஸ்டில் விளையாடி 297 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் இவர் தான். அத்துடன் 26 ஒரு நாள் போட்டிகளில் 32 விக்கெட் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 2,465 விக்கெட் (676 ஆட்டம்) வீழ்த்தினார்.

1976-77-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரின் போது அன்டர் வுட்டின் சிறப்பான பந்து வீச்சால் (29 விக்கெட்) 5 ேபாட்டிகள் ெகாண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும்.

இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு எப்போதும் அச்சுறுத்தலாக விளங்கிய அன்டர்வுட், அவரது விக்கெட்டை மட்டும் டெஸ்டில் 12 முறை கபளீகரம் செய்திருக்கிறார். இவரது பந்து வீச்சில் தான் கவாஸ்கர் அதிக முறை ஆட்டமிழந்து இருக்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது. 'ஸ்டம்பை குறி வைத்து துல்லியமாக பந்து வீசக்கூடியவர். எந்த சூழலிலும் அவரது பந்து வீச்சை எதிர் கொள்வது கடினம்' என்று கவாஸ்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News