விராட் கோலிக்கு புகழாரம் சூட்டிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன்
- விராட்கோலி இளமையாக இருக்கிறார்.
- கோலி விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
கொல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி, டெஸ்டில் 29 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம், 20 ஓவர் போட்டியில் ஒன்று என 80 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பார் என்று வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிளைவ் லாயிட் கூறியதாவது:-
விராட்கோலி இளமையாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவரது கையில் நேரமும் இருக்கிறது.
விராட் கோலி, விவ்ரிச்சர்ட்ஸ் இருவரும், இரண்டு வகையான கிரிக்கெட் வீரர்கள். எனவே அவர்களை ஒப்பிட முடியாது. சர்வதேச போட்டி அட்டவணையில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் இடம் பெற வேண்டும். இருதரப்பு டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் இருக்க வேண்டும் என்றார்.