கிரிக்கெட்

பெர்த் டெஸ்டில் வார்னர் சதம் விளாசல்: பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

Published On 2023-12-14 07:43 GMT   |   Update On 2023-12-14 07:43 GMT
  • மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
  • கவாஜா 41 ரன்னிலும், லபுசேன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது.

பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தொடக்க ஜோடி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

குறிப்பாக டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 25 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும், காவாஜா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் டேவிட் வார்னர் 125 பந்தில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இவரது சதத்தால் ஆஸ்திரேலிய தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

தற்போது ஆஸ்திரேலியா 54 ஓவரில் 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Tags:    

Similar News