மகளிர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிராக 338 குவித்த ஆஸ்திரேலியா
- ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார்.
82 ரன்கள் இருந்த போது அலிசா ஹீலி அவுட் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 119 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.