ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன், ஆனா நன்றிக்கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்: நடிகர் விஜய்
- ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க.
- அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.
கோலாலம்பூர்:
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:
இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனால், என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க.
என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.
எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்.
எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.
அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்.
நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை.
சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும்.
விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது.
நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே என தெரிவித்தார்.