அசிங்க அசிங்கமா பேசுறாங்க.. அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க - நடிகை ரம்யா புகார்
- 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.