தொடர் சறுக்கலில் சல்மான் கான்... வசூலில் கடும் சரிவை சந்தித்த சிக்கந்தர்
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, திரையரங்கில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. படம் வெளியாகி 9 நாட்கள் ஆன பிறகே இந்திய அளவில் இதுவரை மொத்தம் ரூ.104.25 கோடியை வசூல் செய்துள்ளது.
இது போன்ற ஒரு படம் முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும். இதனால் இப்படத்தின் வசூல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.