சினிமா செய்திகள்

தீ பரவட்டும்.. இங்கு அண்ணாதுரைதான் ஆள்கிறார்.. 'பராசக்தி' படத்தில் நீக்கப்பட்ட வசனங்களின் லிஸ்ட்!

Published On 2026-01-10 15:28 IST   |   Update On 2026-01-10 15:28:00 IST
  • இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்
  • யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பராசக்தி'.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம்.

இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

'டெல்லி தான் இந்தியாவா.. நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல.. என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' உள்ளிட்ட வசனங்கள், பேரறிஞர் அண்ணா ஒரு கதாபாத்திரமாக தோன்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

Full View

இந்த படதிற்கு ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று தான் யு/ஏ 16+ தணிக்கைச் சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது.

படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.

சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 வெட்டுகள், மியூட்கள் செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் அண்ணாவின் 'தீ பரவட்டும்' உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் வெட்டு போட்டுள்ளது.

"தீ பரவட்டும்" என்ற வார்த்தையை "நீதி பரவட்டும்" என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தின் அவ்வாசகம் பேசப்படும் அல்லது திரையில் தோன்றும் அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

இதோடு 'இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்' என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சென்சார் வாரியம் கூறியுள்ளது. அதன்படி மாற்றப்பட்டது.

அதோடு, 'இந்தி கத்துக்கிட்டு' என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், "இந்தி அரக்கி" என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "அரக்கி" என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

"இந்தி அரக்கி" என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

டிரெய்லரில் ரவி மோகன் கூறும் 'Anti national' என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.   

Tags:    

Similar News