சினிமா செய்திகள்

பாடலை நீக்குங்கள்..! மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்

Published On 2024-05-23 02:05 GMT   |   Update On 2024-05-23 02:05 GMT
  • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூல்.
  • குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ்.

மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.

கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெறும் "கண்மணி அன்போடு காதலன்.." என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த நோட்டீசில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.

அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News