சினிமா

என் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் பேட்டி

Published On 2019-03-25 06:47 GMT   |   Update On 2019-03-25 06:47 GMT
விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

Tags:    

Similar News