சினிமா
ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் - நவாசுதீன் சித்திக்
பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவாசுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம்.
நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. ரஜினியின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றி இருப்பவர்கள் கைதட்ட தொடங்கி விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது.
அதை நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்து இருந்தேன். ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான்” என்று கூறி இருக்கிறார்.