சினிமா

சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும் - விஜய் சேதுபதி

Published On 2018-10-07 07:34 GMT   |   Update On 2018-10-07 07:34 GMT
96 படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi #96Movie #Sivakarthikeyan
விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரிலீசின் போது தயாரிப்பாளர் நந்த கோபால்-நடிகர் விஷால் இடையே பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் தர வேண்டிய கடனை தான் தருவதாக விஜய்சேதுபதி தெரிவித்தார். இதையடுத்து பைனான்ஸ் வலிகள் விஜய்சேதுபதிக்கு வேண்டாம். அந்த தொகைக்கான பொறுப்பை நானே ஏற்கிறேன் என விஷால் தெரிவித்தார்.

இந்தநிலையில் ‘96’ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:-

தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தேன். என் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது அடுத்த கட்டத்திற்கு போகப் போகிறேன் என்பதை உறுதியாக நம்புவேன்.

என் வாழ்க்கையில் இது போன்று ஒவ்வொரு முறையும் கடந்து வந்திருக்கிறேன். முக்கியமான வி‌ஷயம் எனக்கும், படக் குழுவிற்கும் இது நடப்பது போன்று சினிமாவில் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.



நல்ல படம் வந்து சேரணும் என்று வேலை செய்கிறோம். அது சரியாக வெளியாகி, போட்ட பணம் வந்து சேர்ந்தால் போதும். ஆனால், அதற்குள் நிறைய பிரச்சினைகள் உள்ளன. “விஷால் நல்ல மனு‌ஷன். அவருடைய சூழலில் என்னவோ, அவர் எவ்வளவு காசுக்கு வட்டி கட்றாரோ, அவருக்கு என்ன நடந்ததோ என்று யாருக்குத் தெரியும்.

நமக்கு எப்போதுமே மற்றவர்கள் சூழல் வெளியே பார்த்தது மட்டுமே தெரியும், உள்ளே என்னவென்று தெரியாது. ஒரு துளி அவர் மீது வருத்தமும் இல்லை. இது தவறாகவே தெரியாத போது எப்படி அவர் மீது வருத்தம் ஏற்படும். இதற்கு முன் அவர் எவ்வளவு படங்கள் விட்டுக் கொடுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்”

சீமராஜா திரைப்படத்திற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அதுக்கு முன் விமலுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். பைனான்சியர்கள் மீதும் குறை சொல்ல முடியாது, அவர்களுக்கு அந்த நேரத்தை விட்டால் வேறு நேரம் கிடையாது.

பணம் தான் அங்கு அடையாளம். எங்களுக்கு எப்படி படம் இல்லாமல் மரியாதையில்லையோ, அதே போல் அவர்களுக்கு பணமில்லாமல் மரியாதை கிடையாது”.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News