ஆட்டோ டிப்ஸ்

இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய டாடா நெக்சான் EV மேக்ஸ்

Update: 2022-09-24 10:48 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
  • தற்போது நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தியுள்ளது.

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. லடாக்கின் உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியை எட்டிய முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்சான் EV மேக்ஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது.

லடாக்கில் உள்ள உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 024 அடி உயரத்தில் உள்ளது. இது சாலை மார்க்கமாக பயணம் செய்யக்கூடிய உலகின் உயரமான பகுதி ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மேக்ஸ் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆகும். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 18 ஆம் தேதி அனுபவம் மிக்க ஓட்டுனர்கள் குழு தங்களின் பயணத்தை லே பகுதியில் இருந்து துவங்கியது. டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இது நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரிய பேட்டரி ஆகும்.

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI தர சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் IP67 தர சான்று பெற்றுள்ளன. இத்துடன் எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் காந்த சக்தி கொண்ட ஏசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது காருக்கு 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News