தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல செய்திகள் நாளும் வந்த வண்ணமாகவே இருக்கும். 2-ம் இடத்தில் சூரியன், சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமும், வழிபாடுகளும் தேவை.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் பலம் இழக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இடம், பூமி வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.
குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். மனக்கவலை மாறும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இனித் தானாக நடைபெறும். மேலும் குரு பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதோடு மேலிடத்து ஆதரவும் உண்டு.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நல்ல மாற்றங்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் வரும் நேரம் இது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான சூழல் உருவாகும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 7.2.2026 அன்று 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தனாதிபதி சனியோடு சேருவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு முயற்சிகளில் இருந்த தடை அகலும். அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வழிபிறக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடை பெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் வளர்ச்சியும், பிற்பகுதியில் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். பெண்களுக்கு செலவுகள் கூடும். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, பிப்ரவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.