தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். 'சுக்ர மங்கள யோக'த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். 'வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும். உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.