யோசனை சொல்வதில் வல்லவர்களான தனுசு ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம் தான். எடுத்த முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதார நிலை உயரும். அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாயை சனி பார்ப்பதால் புதிய பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக பிள்ளைகள் வழியில் வழக்குகள் மற்றும் சோதனைகள் வரலாம். எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. இடர்பாடுகள் அகலவும், நல்ல பலன்கள் இல்லம்தேடி வரவும் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி, குரு பகவானை வழிபடுவது நல்லது.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். ''கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'' என்பதற்கேற்ப எதிர்பாராத விதத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். இடையூறு சக்திகள் அகலும். கடை திறப்பு விழா, கட்டிட திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலைக்காகச் செய்த முயற்சிகள் கைகூடும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். ஆனால் உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமாக விளங்குபவர் சுக்ரன். அவர் பகை வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகளின் பலம் கூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகலாம். உதிரி வருமானங்கள் குறையும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது. வழக்குகள் புதிதாக வந்துசேரும். ஒருசிலருக்கு வருமான பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை கூட உருவாகும். எதையும் யோசித்து செய்யவேண்டிய நேரமிது.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான சனியை செவ்வாய் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் வந்துசேரும். உறவினர் பகை உண்டு. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். கடன் அதிகம் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உடல்நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் கூடும். வாங்கிய சொத்துக்களில் வில்லங்கங்களும், பத்திரப்பதிவில் தடைகளும் உருவாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். வருமான பற்றாக்குறை அகலும்.
இம்மாதம் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு குதூகலம் வழங்கும்.