தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆடி மாத ராசிபலன்

Published On 2025-07-17 07:43 IST   |   Update On 2025-07-17 07:44:00 IST

தனுசு ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. எனவே குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு ஏற்ப, நல்ல தகவல்கள் பலவும் இல்லம் தேடி வரப்போகிறது. நினைத்தது நிறைவேறும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் வழிகாட்டுவார்கள். அதேநேரம் 3-ல் சஞ்சரிக்கும் சனியை செவ்வாய் பார்ப்பதால், செய்யும் முயற்சிகளில் சிறு சிறு இடையூறுகளும் வரலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுன - சுக்ரன்

ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாழ்க்கைத் துணைக்கு நற்பலன்கள் நடைபெறும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கும், வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கும் வேலை கிடைக்கும். குரு - சுக்ர சேர்க்கை இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். நழுவிச்சென்ற நல்ல சந்தர்ப்பங்கள் மீண்டும் வரும். பிரபலஸ்தர்களின் துணையோடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். நடக்கும் தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றிபெறும். உறவினர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று மீண்டும் வந்து இணைவர்.

கன்னி - செவ்வாய்

ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாளாக வர வேண்டிய பதவி உயர்வு இப்போது தானாக வரலாம். மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். இதுவரை இழுபறியாக இருந்த காரியங்கள் இனி ஒவ்வொன்றாக முடிவடையும்.

கடக - புதன்

ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். கொடுக்கல் - வாங்கலில் ஆதாயம் உண்டு. உறவினர்களிடையே இருந்த பகை அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். இதுவரை வந்து திரும்பிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து வாசலைத் தட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர். குடும்பத்தில் அமைதி கூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொட்டது துலங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 17, 27, 28, 31, ஆகஸ்டு: 1, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News