தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:41 IST   |   Update On 2025-12-14 08:42:00 IST

தனுசு ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.

உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

Similar News