தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆவணி மாத ராசிபலன்

Published On 2025-08-18 08:07 IST   |   Update On 2025-08-18 08:08:00 IST

தனுசு ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். குருவின் பார்வை இருப்பதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கடக - சுக்ரன்

ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரி மாறுதலாகிச் செல்வார். கடன் சுமை குறைய நீங்கள் கையாண்ட நூதன யுக்திகள் பலன் தரும்.

சிம்ம - புதன்

ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். 'வாழ்க்கைத் துணைக்கு இதுவரை நல்ல வேலை அமையவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் பணிபுரியும் இடத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

துலாம் - செவ்வாய்

ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, சொத்துகளால் லாபம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர் களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ முயற்சி செய்தால் அனுகூலம் உண்டு.

சிம்ம - சுக்ரன்

ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன், குருவிற்கு பகைக்கிரகம் என்பதால், திடீர் திடீரென லாபம் வருவதுபோலவே, திடீர் திடீரென விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. சுபவிரயம் அதிகரிக்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ- மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 23, 24, 28, 29, செப்டம்பர்: 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

Similar News