தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2025-10-16 07:39 IST   |   Update On 2025-10-16 07:40:00 IST

தனுசு ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் நடைபெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென திருப்தி தராத பொறுப்புகள் மாற்றப்படலாம். உறவினர் பகையால் ஊர் மாற்றம், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத சூழல் உருவாகும். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு மனக் கலக்கத்தை உருவாக்கும்.

உச்சம் பெற்ற குரு

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று இருப்பதால் நன்மை கிடைக்கும். என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். ஒருசில காரியங்கள் விரையில் முடிந்தாலும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரிங்கள் முடிவடையாமல் தாமதத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். அதனால் வேறு உத்தியோகத்திற்குச் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.

சனி - ராகு சேர்க்கை

மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தும், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டும் செய்வது நல்லது. ஒரு சில காரியங்கள் நடைபெறுவதுபோல் இருந்து கடைசி நேரத்தில் நழுவி செல்லலாம். கடன்சுமையின் காரணமாக மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வருவதாக இருந்த பதவி உயர்வு தடைப்படும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.

விருச்சிக - செவ்வாய்

ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இவ்வேளையில், சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முக்கிய முடிவும் எடுக்க இயலாது. சொத்துக்கள் விரயமாகலாம். சொந்தங்களால் பிரச்சனை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினாலும் அது திருப்தி அளிக்காது. உடன்பிறப்புகளின் வழியில் செலவு உண்டு.

துலாம் - சுக்ரன்

ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பெண்வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படும். கலைஞர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி நிலவும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இனிமை தரும். எப்பொழுதோ கொடுத்த தொகை வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News